Thursday, January 23, 2014

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
நாம் பிறரிடம் பேசும் போது உள்மனதில் வஞ்சகம், பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவை இருப்பினும்அவரிடம் நல்லமுறையில் இனிப்பாக பேசி பழகுவோம். அல்லது காரியத்தை சாதித்துக்கொள்வோம்.
இதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்பர்.
விஷம் போன்று தாக்கும் கொடுமையான சொற்களை உள்ளேயே அடக்கிக்கொண்டு நல்ல இனிப்பான சொற்களை மட்டும் எல்லோரிடமும் பேச வேண்டும். இந்த மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை.
இதை குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதில் இருந்தும் வள்ளுவ பெருந்தகை கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் சொல்லாடலிலும் அறியலாம்.
இதைத்தவிர மேலும் ஒரு வெளிப்படையான விளக்கம் இப்பழமொழி கூறுகிறது
நாக்கு பார்ப்பதற்கு ஒன்றாகவே இருந்தாலும் அதில் பல பாகங்கள் உள்ளது.
இன்றைய மருத்துவ அறிஞர்கள் நாக்கை பகுத்தாய்ந்து கூறுவது இனிப்புச்சுவையை உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனிப்பகுதியில் உள்ளது. கசப்புச்சுவையை அறியும் சுவை அரும்புகள் நாக்கின் கடைசி தொண்டைப்பகுதியி்ல் உள்ளது என்பதாகும்.
இதையே வெளிப்படையாக இப்பழமொழி அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் என்று எடுத்து முதியோர்களின் மருத்துவ அறிவையும் விளக்குகிறது.

அடாது செய்தவன் படாது படுவான்

அடாது என்பதற்கு தவறு என்று பொருள்.
தவறு செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும்.
இங்கே கவனிக்க வேண்டியது ஒருவன் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிவரும்.
அதை மறைக்க மேலும் தவற வேண்டி வரும். இவ்வாறு ஒவ்வொரு தவறின் பின் விளைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருக்கும்.
எனவே அவன் விடாது பாடுபடுவான்.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அவை அடக்கம், நாவடக்கம், ஐம்பொறி அடக்கம், மன வொழுங்கு போன்ற ஒழுக்கம் உடையவர்களே அறிஞர்கள். 
ஆத்திரமாக இருப்போர்கள், பேசத்தெரியாத விசயங்களையோ பேசக்கூடாதவற்றை நாவடக்கம் இல்லாமல் பேசுவோர்கள், உடல் ஒழுக்கம் இல்லாமல் ஐம்பொறிகளையும் அனுபவிக்க விரும்புவோர்கள், மன ஒழுக்கம் இல்லாமல்  காம குரோத செயல்களை செய்வோர்கள் போன்றவர்கள் அறிஞர்கள் அல்லர். இதை ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியாலும் அறியலாம். 

திருவள்ளுவரும் அடக்கமுடைமை என்று அதன் சிறப்பை போற்றுகிறார். எனவே அடக்கம் சிறந்த பண்பாக பேசப்படுகிறது. 

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அதிகம் பேசும் பெண்களை வாயாடி எனவும் அதிகம் அகங்காரம் கொண்ட பெண்களை அடங்காப்பிடாரி எனவும் வகைப்படுத்தும் சமூகம் நம்முடையது. 
ஒரு பெண் மற்றவர்களின் பார்வையில் நேசிக்கப்படுபவளாகவும் பண்பு மிக்கவளாகவும் இருப்பதையை நம் சமூகம் விரும்புகிறது. அமைதியான பண்பு  அப்பெண்ணிற்கு அணிகலன் போல ஆகிறது என்பதை சுட்டிக்காட்ட அடக்கமே பெண்ணிற்கு அழகு என்ற பழமொழி வழங்கப்படுகிறது. 
ஆத்திரமான அடக்கமற்ற பெண் மற்றவர்கள் பார்வையில் இகழப்படுபவளாகவும் தவறாக நினைக்கப்படுபவள் ஆகவும் இருக்கிறாள். அமைதியாக ஆனால் அறிவுடன் ஒரு பெண் செயல்பட வேண்டும் என்பதையும் சமூகத்தில் பெண் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சமூகம் பெண்களின் நடத்தை அடிப்படையில் வளரும் என்ற சிந்தனையும் இப்பழமொழி விளக்குகிறது. 

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

அச்சாணி என்பது பண்டை வண்டிகளில் சக்கரங்களை கழன்று விடாமல் பிணைத்துக்கொள்ளும் சக்கரக் காப்பாணி ஆகும்.
அச்சில் நிற்கும் ஆணி.
இது கழன்று விட்டால் சக்கரம் தனியே வந்துவிடும், வண்டியும் வீழ்ந்துவிடும், மூன்று சாண் கூட ஓடாது.
குடும்பம், சமூகம், நாடு, அமைப்பு இவ்வாறு எதை எடுத்துக்கொண்டாலு்ம் தலைவன் என்ற அச்சாணி அவசியம். சரியான வழிகாட்டி நடத்திச்செல்லும் அச்சாணி போன்றவன் இல்லையென்றால் அந்த அமைப்பு சரிவர இயங்க முடியாது என்பதை இப்பழமொழி விளக்குகிறது.
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து
- முதுமொழி வெண்பா

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்

அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருள் உண்டு. அதே போல பண்டைய ஊர் மக்கள் கூடிப்பேசும் மண்டபத்தை அம்பலம் என்றும் கூறுவர். அம்பலத்தில் ஒரு விசயம் வந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும் அதலால் இரகசியம் அம்பலமானது போன்ற சொல்லாடல் ஏற்பட்டது. 
அம்பலத்தில் பலர் இருக்க அதன் முன்னிலையில் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அச்சம் (பயம்)  இல்லாதவனே அம்பல மண்டபத்தில் பேச முடியும். 
அம்பலத்தில் பேச தயங்குகிறவனை ஏளனமாக அச்சமுடையவன் என்று கேலி பேசுவதற்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்ற வாக்கியம் வழங்கப்பட்டது. 

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும். 
எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.